இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்
டெல்லி மும்பை இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில், அந்த பெண் பயணியிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. முன்னதாக, அந்தப் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக வீடியோ ஆதாரத்துடன் பதிவிட்டிருந்தார். பொது சுகாதார அதிகாரியான தான், சாண்ட்விச் தரமானதாக இல்லை என புகார் தெரிவித்த பின்னும், விமான பணிப்பெண் அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்கியதாகவும், விமானத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இருந்த நிலையில், அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இது தொடர்பாக புகார் எழுப்பப் போவதாகவும் அவரின் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பெண் பயணியின் பதிவு
மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம்
இந்த பதிவுக்கு பதில் அளித்த இண்டிகோ நிறுவனம், அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதோடு, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது. "டெல்லி மும்பை 6E 6107 விமானத்தில் பயணி ஒருவர் உணவு தொடர்பான புகாரை வழங்கி உள்ளது குறித்து நாங்கள் அறிவோம். உணவு மற்றும் பானங்களை வழங்குவதில், உயர்ந்த தரத்தை பேணுவதில் எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வலியுறுத்த விரும்புகிறோம். புகாருக்கு பின்னர் சாண்ட்விச் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது" என அந்நிறுவனம் தனது அறிக்கையில் விவரித்தது. பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், அதற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.