பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம்
ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று(ஜூன்-5) தெரிவித்தது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்(போக்சோ) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட பெண் உரிமை ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீதான கிரிமினல் வழக்கையும் கேரள நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ரெஹானா பாத்திமா(33) மேலாடையின்றி தனது குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில், பாத்திமாவின் குழந்தைகள் அவரது அரை நிர்வாண உடலில் வண்ணம் தீட்டி கொண்டிருந்தனர். "பாடி ஆர்ட் அண்ட் பாலிடிக்ஸ்" என்று ஹேஷ்டேக் இடப்பட்டிருந்த அந்த வீடியோ பெண் நிர்வாணம் பற்றிய சமூக செய்தியை பரப்ப பகிரப்பட்டதாகும். ஆனால், அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
பாத்திமாவின் வழக்கை ரத்து செய்த பிறகு நீதிமன்றம் கூறியதாவது:
ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது. இங்குள்ள சூழலில், மனுதாரர் தனது அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த நிர்வாணத்தை பயன்படுத்தி இருக்கிறார். அவரது குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அவரது உடலில் பூசி இருந்த வண்ணங்கள் அவரது மார்பை மறைத்திருந்தது. மனுதாரர் தனது வெற்று மார்பைக் காட்டவில்லை. எனவே, அந்த வீடியோவினால் ஒருபோதும் பாலியல் உணர்வைத் தூண்ட முடியாது. தாய்-குழந்தை உறவு என்பது பூமியின் மிகவும் புனிதமான உறவுகளில் ஒன்றாகும். தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவைவிட வலுவான பந்தம் எதுவுமில்லை. பாத்திமா மீது வழக்குத் தொடுப்பது அந்த குழந்தைகளைத் தான் பாதிக்கும். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, வழக்கை தொடர அனுமதிக்க முடியாது.