முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த மாத இறுதியில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதால், அதற்கு முன்னர் அமைச்சர்களிடம் கலந்தாலோசிக்க இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினின் பெயர் பரிந்துரைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நேரில் காண விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பிரான்ஸ் சென்றுள்ளதால், அவர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம்
பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அவர் கூறியதன்ப்படி, "அமைச்சரவை கிட்டத்தட்ட 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாகன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது". "இந்தியாவிலேயே முதன்முறையாக சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18,720 படுக்கைகளை கொண்ட ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டடத்தை ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்" என தெரிவித்தார்.