
இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?
செய்தி முன்னோட்டம்
2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.
ஆனால், அதனைத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறி ஸ்டார்ட்அப்களின் மீதான முதலீட்டைத் குறைக்கத் தொடங்கின் முதலீட்டு நிறுவனங்கள்.
மேலும், முதலீடுகள் குறைந்ததோடு, ஸ்டார்ட்அப்களின் மதிப்பும் குறையத் தொடங்கியது. பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களின் மதிப்பைக் குறைத்து முதலீடு செய்யக் கோரின.
2021-ன் நான்காம் காலாண்டில் 187 பில்லியன் டாலர்கள் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முதல் காலாண்டில் இருந்து ஸ்டார்அப்களின் மீதான முதலீடு குறையத் தொடங்கி, தற்போது அந்தநிலை தொடர்கிறது.
இந்தியா
இந்திய ஸ்டார்ட்அப்களின் நிலை:
2021-ல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர்கள் முதலீட்டை ஈர்த்தன. இதுவே 2022-ம் ஆண்டு 20 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது.
தற்போது 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெறும் 2 பில்லியன் டாலர்கள் முதலீட்டை மட்டுமே இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஈர்த்திருக்கின்றன.
இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 75% குறைவு. இந்த ஆண்டு இறுத்திக்குள் 10 பில்லியன் டாலர்களை முதலீட்டை மட்டும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு முதல் காலாண்டில் 561 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடுகளை ஈர்த்த நிலையில், இந்த ஆண்டு முதல் காலாண்டில் 217 நிறுவனங்கள் மட்டும் முதலீட்டை ஈர்த்திருக்கின்றன.
இனிவரும் நாட்களில் இது மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.