ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) புதுடெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். ஆனால் நாகாலாந்தின் மலைப் பகுதிகளிலும், நாகா ஆதிக்கம் செலுத்தும் மணிப்பூரின் சில பகுதிகளிலும், மியான்மரின் எல்லையைத் தாண்டிய சில பகுதிகளிலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாப்படுகிறது. இதற்கான பின்னணியை புரிந்துகொள்ள, சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியா வரை நாம் பயணிக்க வேண்டும். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மர் 1935இல் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டாலும், எஞ்சிய வடகிழக்கு மாகாணங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தன.
ஆகஸ்ட் 14ஐ சுதந்திர தினமாக அறிவித்த நாகர்கள்
பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இந்தியர்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது, நாகர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகாலாந்து, மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது பண்டைய பெருமையை பறைசாற்றும் வகையில் தனி நாகாலாந்து கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். 1929இல் இந்தியா வந்த சைமன் கமிஷனிடமும், இந்த கோரிக்கையை முன்வைத்தாலும், பிரிட்டிஷ் இந்திய அரசு, இதை கண்டுகொள்ளவில்லை. இந்த கோரிக்கை தொடர்ந்து வந்த நிலையில், 1947 ஆகஸ்ட் 14 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் காலனி ஆதிக்கம் இந்தியாவில் முடிவதாக அறிவித்த உடனேயே நாகர்கள் தங்களுடைய தனிநாடை அறிவித்து, நீலக்கொடியேற்றி சுதந்திரத்தை கொண்டாடினர். இதை நினைவுகூரும் வகையில், நாகா சுதந்திர தினம் என்ற பெயரில் இதை தற்போதும் நாகா மக்கள் ஆகஸ்ட் 14 அன்று கொண்டாடி வருகின்றனர்.
நிறைவேறாமல் போன நாகாலாந்து தனிநாடு கோரிக்கை
இந்தியாவின் ஒரு அங்கமாக இல்லாமல் தனிநாடாக செயல்பட வேண்டும் என போராடி வந்த நாகா கிளப் 1947 ஆகஸ்ட் 14 அன்று நாகாலாந்து சுதந்திர தினத்தை கொண்டாடினாலும், அவர்களின் தனிநாடு கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்தியா தனக்கான அரசியலமைப்பை உருவாக்கி 1950இல் குடியரசாக மாறிய நிலையில், மே 16, 1951 அன்று நாகாக்கள் தனிநாடு கோரிக்கைக்காக வாக்கெடுப்பை நடத்தினர். அதில் 99.9% மக்கள் நாகாலாந்து சுதந்திர அரசிற்கு ஆதரவாக வாக்களித்தாலும், அது ஏற்கப்படவில்லை. தெற்காசியாவின் நீண்ட நெடிய சுயாட்சி போராட்டமாக நாகலாந்து தனிநாடு போராட்டம் உள்ளது. இதற்கிடையே, இந்திய அரசின் தொடர் பேச்சுவார்த்தையால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாகலாந்து போராட்டக் குழுக்கள் அமைதி காத்து வருகின்றனர்.