
அஜித்குமார் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்த காரணமான நிகிதா யார்?
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் காவல்துறையினர் அஜித்குமாருக்கு எதிராக நகை திருட்டு புகார் அளித்த நபர் யார்? யாருடைய அழுத்தத்தின் பேரில் காவல்துறையினர் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஊடக தகவல்கள் படி, அஜித்குமார் பெயரில் புகார் அளித்த நபர் டாக்டர்.நிகிதா. பேராசிரியையான இவர், தற்போதுள்ள விவகாரத்தில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறார். முன்னர் "டாக்டர்" என்று குறிப்பிடப்பட்ட நிகிதா, மருத்துவம் படித்தவர் அல்ல என்றும், பி.எச்.டி. முடித்த முனைவர் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல்லில்உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வந்தார் என்று கூறப்படுகிறது.
விவரங்கள்
மாயமான நிகிதா மற்றும் அவரது தாயார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி அம்மாள் தற்போது காணாமல் போயுள்ளனர். அவர்களது வீடு பூட்டப்பட்ட நிலையில் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது அஜித் குமார் கொலை சூடு பிடித்த நிலையில் நிகிதா மற்றும் அவரது தாய் எங்கு சென்றனர் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
பணமோசடி
நிகிதா மீது பணமோசடி வழக்குகள்
2010ஆம் ஆண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றியதாக நிகிதா மற்றும் சிவகாமி அம்மாள் மீது திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. குற்றச்சாட்டுப்படி, ரூ.16 லட்சம் வரை பணம் வாங்கிய பின்னும் வேலை வழங்கவில்லை என்றும், பணத்தை திருப்பு கேட்டவர்கள் மிரட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், மதுரை மாவட்டம் தேங்கல்பட்டியை சேர்ந்தவரிடமும் ரூ.25 லட்சம் வாங்கி பேராசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐஏஎஸ் அதிகாரி
ஐஏஎஸ் அதிகாரி தொடர்பு மூலமாக அஜித்குமார் வழக்கிற்கு அழுத்தம்?
சம்பவ நாளில் மடப்புரம் கோவிலில் நிகிதா மற்றும் அவரது தாயாரை சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல அஜித்குமார் ரூ.500 கேட்டதாகவும், நிகிதா ரூ.100 மட்டுமே தருவதாக கூறியதாகவும், இதனால் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தவிர நிகிதா, சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு அஜித்குமார் மீது நகை திருட்டு புகாரை பதிவு செய்ய வைத்து, போலீசாருக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுததாகவும், இதனையடுத்து தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரிக்க அழைத்துச் சென்று தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.