"எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்": சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்கு உதயநிதி பதில்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து தான் கூறிய கருத்துகளை பாஜக திரித்து பேசுவதாக குற்றம் சாட்டியதுடன், தான் கூறிய வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. "சனாதனம் என்பது எதிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல, ஒழிக்க வேண்டிய விஷயம். கொரோனா, டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று உதயநிதி அப்போது கூறியிருந்தார். இதற்கு, தமிழக பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல், மத்தியில் ஆளும் பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
சனாதனத்தை மட்டுமே நான் விமர்சனம் செய்தேன். சனாதன தர்மம் என்ற கருத்தை அழிக்கத்தான் நான் அழைப்பு விடுத்தேன். நான் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக சிலர் சிறுபிள்ளைத்தனமாக கூறுகிறார்கள். சிலர் திராவிடம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு திமுகவினர் கொல்லப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ள முடியுமா? சனாதனம் என்றால் என்ன? அதன் பொருள் எதையும் மாற்றக்கூடாது, அனைத்தும் நிரந்தரமானவை என்பதாகும். ஆனால் திராவிட மாடல் என்பது மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அனைவரும் சமமாக இருக்க வேண்டும். பாஜக எனது அறிக்கையை திரித்து பொய் செய்திகளை பரப்புகிறது. இது அவர்களின் வழக்கமான வேலை. அவர்கள் என் மீது என்ன வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.