இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?
2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு எப்போது தொடங்கும் என வருமான வரித்துறை இன்னும் அறிவிக்கவில்லை. எப்போது வருமான வரி தாக்கல் செய்வது? ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அதனைத் தொடர்ந்து வரும் நிதியாண்டு மதிப்பீட்டு ஆண்டாகக் கருதப்படுகிறது. மதிப்பீட்டு ஆண்டில் தான் அதற்கு முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 31-ம் தேதி நிறைவடைந்த கடந்த நிதியாண்டிற்கான (FY 2022-2023), மதிப்பீட்டு ஆண்டு தற்போது நடைபெற்று வருகிறது (AY 2023-2024). பொதுவாக ஒரு மதிப்பீட்டு ஆண்டு தொடங்கிய உடனேயே (ஏப்ரல் 1) முந்தைய நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதும் தொடங்கவிடும். இதற்கான அறிவிப்பையும் பிப்ரவரியிலேயே நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுவிடும்.
எப்போது தொடக்கம்?
இந்த ஆண்டு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் வருமான வரி தாக்கல் செய்ய தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சம்பளதாரர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. ஏனெனில், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து ஃபார்ம் 16-ஐ பெற்ற பிறகே சம்பளதாரர்கள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஃபார்ம் 16-ஐ நிறுவனங்கள் ஜூன் மாதத்தின் முதல் பாதியில் தான் வழங்கும். அதன் பிறகே சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். ஜூலை 31-ம் தேதி வரை சம்பளதாரர்கள் வருமான வரித்தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்படும். அபராதங்களில் இன்றி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வருமான வரித்தாக்கல் செய்வது நல்லது.