MYV3Ads: கோவையை கலங்கடித்த இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?
நேற்று கோவை மாநகரமே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு திடீரென பொதுமக்கள் சாலையில் கூடினார்கள். விசாரித்தபோது, யூடியூபில் விளம்பரம் பார்த்தால், வருமானம் கொட்டும் என்று கூறி பிரபலமடைந்த MYV3Ads என்ற தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்தியது தெரியவந்தது. MYV3Ads என்ற ஆன்லைன் செயலி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், தன் நிறுவனத்தின் மீது கைது படலம் நடைபெறும் என தெரிந்து, அந்த கம்பெனியின் MD, முதலீட்டாளர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு ஏற்கனவே அலெர்ட் செய்துள்ளார். அதனால் பல ஊர்களிலிருந்தும் மக்கள் அங்கே குவிந்துள்ளனர்.
My V3 Ads நிறுவனத்தின் பின்னணி என்ன?
கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் செயலி, 'My V3 Ads'. இந்த நிறுவனம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பிரபலம். தினசரி இரண்டு மணி நேரம் வீடியோ பார்ப்பது, புதிய நபர்களை இணைப்பதன் போன்றவற்றின் மூலம் எளிதாக அதிக வருமானம் பார்க்கலாம் என்பது இந்த நிறுவனத்தின் USP. இதில் இணைவதற்கு ரூ.360 தொடங்கி ரூ.1,21,000 வரை பல்வேறு பிரிவுகளில் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணையலாம். பின்னர், தினசரி ரூ.5 தொடங்கி ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என்றும் அந்த நிறுனத்தின் சார்பில் விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தவிர கட்டணசந்தாவிற்கு ஏற்ப பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. புதிய நபரை இணைப்பதற்காக கமிஷனும் வழிபட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பணமோசடி புகார் எழுந்துள்ளது.