காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன?
இந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, இந்திய அரசு ஏஜென்சி கொன்றதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து, இந்தியா அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு உத்தரவிட்டது கனடா. இந்த கூற்றுக்களை கடுமையாக நிராகரித்த இந்தியா, இதனை தொடர்ந்து, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை அடுத்த ஐந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.
காலிஸ்தான் இயக்கம் என்றால் என்ன?
இந்த சர்ச்சையின் மூலகாரணம், சீக்கிய சுதந்திரத்தை நாடும் காலிஸ்தான் இயக்கத்தைச் சுற்றி வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்திற்கு, கனடா ஆதரவளிப்பதாக இந்தியா பலமுறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் கனடாவில் வாழும், சீக்கிய புலம்பெயர்ந்தோர் மத்தியில் இந்த இயக்கத்திற்கு ஆதரவு உள்ளது. இந்தியாவில், சீக்கிய சுதந்திர இயக்கம், 1970கள் மற்றும் 1980களில் நாட்டை உலுக்கிய, ஆயுதமேந்திய கிளர்ச்சியாக மாறியது. சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடக்கு பஞ்சாப் மாநிலத்தில் இந்த இயக்கம் மையம் கொண்டிருந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த இந்த கிளர்ச்சி, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையால் ஒடுக்கப்பட்டது. எனினும் இந்த நடவடிக்கையில், சீக்கிய போராளித் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்
1984 ஆம் ஆண்டு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தஞ்சமடைந்திருந்த பிரிவினைவாதிகளை விரட்டியடிக்க, இந்தியப் படைகள் அங்கு நுழைந்தன. இந்த வரலாற்று நிகழ்வை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என அழைத்தனர். இதனை தொடர்ந்து, அக்டோபர் 31, 1984 அன்று, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது இரு சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் சீக்கியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான கலவரத்தைத் தூண்டியது.
காலிஸ்தான் இயக்கம் இன்னும் தொடர்கிறதா?
பஞ்சாபில், காலிஸ்தான் இயக்கத்திற்கு இன்னும் சில ஆதரவாளர்கள் உள்ளனர், ஆனால் முன்பு போல, இன்று அங்கே தீவிர கிளர்ச்சி இல்லை. எனினும், பல ஆண்டுகளாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் வர முயற்சிப்பதாக உளவுத்துறை பலமுறை எச்சரித்து வருகிறது. இதனை தொடர்ந்தே, மத்திய அரசாங்கம், காலிஸ்தான் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியது. அதோடு, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தது. நரேந்திர மோடி அரசாங்கம் காலிஸ்தான் பயங்கரவாதிகளைப் பின்தொடர்வதையும் தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் இயக்கத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த டஜன் கணக்கான தலைவர்களை கைது செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், காலிஸ்தானுக்கு அழைப்பு விடுத்து, பஞ்சாபில் வன்முறை அச்சத்தைத் தூண்டிய சீக்கியத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தியாவிற்கு வெளியே காலிஸ்தான் இயக்கம்
பல ஆண்டுகளாக, காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளை இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கனடாவில், சீக்கியர்கள் நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 2% உள்ளனர். வெளிநாட்டில், பலமுறை இந்தியாவிற்கு எதிரான செயல்களை இந்த காலிஸ்தான் இயக்கத்தினர் சமீபகாலமாக செய்து வருகின்றனர். இந்து கோவில்களை இடிப்பது, இந்தியா தூதரகத்தின் மீது தாக்குதல்,இந்திய கொடியை கீழிறக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தான், காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இதன் பின்னால் இந்தியா அரசாங்கம் இருப்பதாகவும், தன்னுடைய மண்ணில், தன் நாட்டில் பிரஜை கொல்லப்பட்டதை ஏற்கமுடியாது என கனடா கூறி வருகிறது.