
மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சில நகரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் நாடு தழுவிய அளவில் கனரக வாகன ஓட்டுனர்கள் மத்திய அரசின் புதிய ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக தொடங்கியுள்ள போராட்டமாகும்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் பல முக்கிய சாலைகளை மறித்து ஓட்டுனர்கள் திங்கட்கிழமை மூன்று நாள் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த சட்டத்திற்கு கனரக வாகன ஓட்டிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், சில இடங்களில் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Union Govt new Hit and Run Act creates stir
ஹிட் அண்ட் ரன் சட்டம் என்றால் என்ன?
இந்திய தண்டனைச் சட்டத்தை மாற்றி மத்திய அரசு புதிய பாரதிய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் சாலை விபத்து தொடர்பான வழக்குகளில் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
புதிய சட்டத்தின்படி, சாலை விபத்தில் ஒருவரை எதிர்பாராதவிதமாகக் கொன்றால் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பைச் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்துவிட்டால் அல்லது சம்பவத்தை உடனடியாகப் காவல்துறையில் புகாரளிக்கத் தவறினால், பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹7 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இது பெரிய வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.