அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கிய தொடர் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பின் 370வது பிரிவின் படி வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இது நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க இருக்கிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை
ஜம்மு காஷ்மீர், வடக்கு இந்திய எல்லையில் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குள்ளான இடத்தில் அமைந்துள்ளது. எனவே, ஜம்மு காஷ்மீரில் இருக்கும் தனித்துவமான நிலையை அங்கீகப்பதற்காக சட்டப்பிரிவு 370இன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு அந்தஸ்து சுயாட்சியையும், குறிப்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரத்தையும் வழங்கும். மேலும், இதன் மூலம், சிறப்பு அந்தஸ்து உள்ள மாநிலத்திற்கு தனித்துவமான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இதனால், மாநில அரசுடன் கலந்தாலோசித்த பின்னரே மத்திய சட்டங்களை மத்திய அரசு நீட்டிக்க முடியும். மத்திய அரசுக்கே இப்படி பல தடைகள் இருந்ததால், இந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.