தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது?
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் பதபடுத்தும் ஆலையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, அம்மோனியா சிலிண்டர் வெடித்ததில், அமோனியா வாயு கசிய தொடங்கியது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற அந்த விபத்து காரணமாக கிட்டத்தட்ட 30 பெண் தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர் எனக்கூறப்பட்டுள்ளது.
பதப்படுத்த பயன்படுத்தப்படும் அம்மோனியா வாயு
தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்காக அம்மோனியா பயன்படுத்தப்படுகிறது. அந்த ஆலையில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பெண்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் அங்கே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (வெள்ளி) நள்ளிரவு ஏற்பட்ட கசிவு ஆலை முழுவதும் பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இதே போன்ற வாயு கசிவு ஏற்பட்டுள்ளது அம்பலம்
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், இதே ஆலையில், கடந்த 2014-ம் ஆண்டும் இதே போன்றதொரு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது எனவும், அதில் 54 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.