இரவு நேர பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு; புதிய திட்டத்தை அறிவித்தது மேற்கு வங்க அரசு
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பணியின் போது பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக மேற்கு வங்க அரசு பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி அலாரம் சாதனங்களுடன் கூடிய சிறப்பு மொபைல் ஃபோன் செயலி உருவாக்கப்படும். இது பணிபுரியும் பெண்கள் அனைவரும் கட்டாயமாக பதிவிறக்கம் செய்து, உள்ளூர் காவல் நிலையங்கள்/காவல் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட வேண்டும். ஹெல்ப்லைன் எண். 100/112 எந்த ஒரு அவசர சூழ்நிலையின் போதும் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேற்கு வங்க அரசின் அறிவிப்புகள்
பெண்களுக்கான கழிப்பறையுடன் கூடிய தனியான ஓய்வு அறைகள் வேலை செய்யும் இடத்தில் இருக்க வேண்டும். 'ரத்திரேர் சதி' அல்லது பெண் தன்னார்வலர்கள் இரவில் பணியில் இருக்க வேண்டும். சிசிடிவி மற்றும் அதன் கண்காணிப்பு மூலம் முழு பாதுகாப்புடன் பெண்களுக்கான பாதுகாப்பான மண்டலங்கள் கண்டறியப்பட்டு உருவாக்கப்படும். மேலும், பெண்கள் எங்கெல்லாம் இரவுப் பணியில் தேவையில்லையோ அங்கிருந்து எல்லாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய் கூறியுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்கள், மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக நாடு தழுவிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.