மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை காலமானார். அவருக்கு வயது 80. இவருக்கு மீரா என்ற மனைவியும், சுசேதன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு, அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு உடல்நலம் தேறி மீண்டு வந்தார். இந்நிலையில், மீண்டும் உடல்நலம் சரியில்லாமல் போன நிலையில், வியாழக்கிழமை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே காலமானார்.
புத்ததேவ் பட்டாச்சார்யாயின் அரசியல் வாழ்க்கை
மேற்குவங்கத்தைச் சேர்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான பொலிட்பீரோவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். மேற்குவங்கத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசுவிற்கு பிறகு, 2000ஆம் ஆண்டு முதல்வரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2011 வரை அந்த பதவியில் இருந்தார். ஜோதிபாசுவுடன் ஒப்பிடும்போது, மாநிலத்தில் தொழில்துறையில் சற்று தாராளமய கொள்கையுடன் புத்ததேவ் நடந்து கொண்டாலும், அதுவே மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்திற்கு முடிவுரை எழுதியது. சிங்கூரில் டாடா தொழிற்சாலை அமைக்க அவரது அரசு வழங்கிய அனுமதிக்கு எதிராக போராடிய திரிணாமுல் காங்கிரஸ் அதன் மூலமே புத்ததேவை 2011 தேர்தலில் வீழ்த்தி, ஆட்சியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.