கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
உத்தர பிரதேசம், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் செவ்வாயன்று தீவிரமடைந்தது. இதையடுத்து, பூசாரிகள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நடைபாதை வடிவமைப்புகளின் நகல்களை தீயிலிட்டு எரித்தனர். போராட்டக்காரர்கள் ரத்தத்தால் எழுதிய கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திட்டத்தை கைவிடவும், பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை காப்பாற்றவும் வலியுறுத்தி இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நடத்திய தர்ணா காரணமாக, பாங்கே பிஹாரி கோவிலுக்கு அருகிலுள்ள சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
உச்சநீதிமன்ற வழக்கு
இதுகுறித்து பாங்கே பிஹாரி வியாபாரி சங்கத்தின் தலைவர் அமித் கெளதம் கூறுகையில், பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட 108 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. "ஒருபுறம், நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடுகிறோம், மறுபுறம், போராட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," என்று அமித் கவுதம் கூறியுள்ளார். 85 வயதான போராட்டக்காரர் சகுந்தலா தேவி கோஸ்வாமி, "நடைபாதை அமைப்பது பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் எங்களை வீடற்றவர்களாகவும் மாற்றும்." என்று கூறி இருக்கிறார். இந்த போராட்டம் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கை ஜனவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.