சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அதிக குழந்தைகளை பெற்றுடுக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) தெற்கு சிக்கிமின் ஜோரேதாங் நகரில் மாகே சங்கராந்தி விழாவில் உரையாற்றிய அவர், சிக்கிமின் "கருவுறுதல் விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை என்ற மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்திருப்பதால்" பழங்குடி சமூகங்களின் மக்கள் தொகை குறைந்துள்ளது என்று கூறினார். "பெண்கள் உட்பட உள்ளூர் மக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை நாம் தடுக்க வேண்டும்," என்று முதல்வர் தமாங் தெரிவித்திருக்கிறார்.
மகப்பேறு விடுப்பும் ஊக்கத்தொகைகளும்
மேலும், பணியில் இருக்கும் பெண்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பும், குழந்தைகளை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆண் ஊழியர்களுக்கு 30 நாட்கள் மகப்பேறு விடுப்பும் அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது என்றார் அவர். இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு ஒரு இன்கிரிமென்ட்டும், மூன்றாவது குழந்தை பெற்றெடுக்க இரண்டு இன்கிரிமென்ட்டும் வழங்க சிக்கிம் மாநில அரசு முன்மொழிந்துள்ளது. ஒரு குழந்தை மட்டுமே உள்ள ஒரு பெண்ணுக்கு இந்த நிதி சலுகை கிடைக்காது என்று தமாங் தெளிவுபடுத்தி இருக்கிறார். பொது மக்களும் இந்த நிதியுதவிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள. இது பற்றிய விவரங்கள் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்புத் துறைகளால் வகுக்கப்படும் என்று மேலும் அவர் கூறி இருக்கிறார்.