ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்
தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அதன்படி, பாலமேடு மற்றும் சூரியூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட அரவிந்த்ராஜ் (24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சூரியூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை காண வந்த புதுக்கோட்டை மாவட்ட களமாவூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்பவரும் எதிர்பாரா விதமாக காளை மாடு முட்டி படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்ட தமிழக முதல்வர்
இச்செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இறந்தவர்களுக்கு ஓர் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர், உயிரிழப்பு செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம், பாலமேடு போன்ற பகுதிகளில் நேற்று நடந்து முடிந்த நிலையில், அதில் வெற்றி பெற்றோருக்கு தமிழக அரசு முன்னதாக அறிவித்தப்படி, புதிய கார், இருசக்கர வாகனங்கள், தங்கக்காசு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.