தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம், தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் விமர்சையாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இதுவரை தலைநகரான சென்னையில் நடத்தப்பட்டது இல்லை. எனவே, சென்னையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா என்று பலர் கேள்வியெழுப்பி வந்த நிலையில், அண்மையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் சிறப்பு என்று ஓர் கோரிக்கையினை முன்வைத்தார். இதனையடுத்து இம்முறை சென்னையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஜல்லிக்கட்டு மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதில் 501 காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களமிறங்குவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை படப்பையில் முதல் ஜல்லிக்கட்டு
மேலும், இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பரசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். சென்னை புறநகர் மற்றும் மாநகர் பகுதி மக்கள் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டினை கண்டு ரசிக்கலாம் என்றும், முதல்வரின் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501காளைகள் இடம்பெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள சிறந்த மாடுபிடிவீரர்கள் களம் இறங்குகிறார்களாம். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்குவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் முதலிடம்பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், வெற்றிபெறும் மாடுபிடி வீரருக்கு மோட்டார்சைக்கிளும் பரிசாக வழங்கப்படும் என்று தமிழகஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.