அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்
மதுரையில் வருடந்தோறும் மிக விமர்சையாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுபோட்டி கொண்டாடப்படும். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில், ஒரு போட்டியில் மட்டுமே ஒரு காளையானது பங்கேற்க முடியுமாம். இதனுள், முதன்முதலாக அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காணவே வெளிநாட்டினர் வந்ததால், இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்திப்பெற்றது ஆகும். எனவே, இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் அதிகளவில் பங்கேற்கப்படுகிறது. 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு நேற்றுமுதல் துவங்கியுள்ளது. இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் madurai.nic.in என்னும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் காளைகள் பெயர் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பெயர் பதிவு செய்யவேண்டும்.
பல்வேறு பரிசுகள் அறிவிப்பு - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டு கூடுதல் எதிர்பார்ப்பு
இதனையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத்தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், முன்பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மீண்டும் போட்டி நடைபெறும் தினத்தன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே களத்தில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்று கூறினார். மேலும், இந்தாண்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துக் காளைகளுக்கும் தங்க காசும், வெற்றிபெறும் காளைக்கு ஓர் புதிய காரும் பரிசாக அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதே போல், அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசும், வெற்றிபெறும் வீரருக்கு ஓர் புதிய காரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, டிவி, பிரிட்ஜ், பீரோ, கட்டில் போன்ற பல்வேறு பரிசுகளும் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.