பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி மாற்றங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
செய்தி முன்னோட்டம்
புதிய மாதமான பிப்ரவரி இன்று பிறந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் முதல் வரி செலுத்துவோர் வரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வங்கி சேவைகள், ஃபாஸ்டேக் விதிகள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் என உங்களின் அன்றாடச் செலவுகளைப் பாதிக்கும் அந்த முக்கிய மாற்றங்கள் இதோ:
வங்கி
வங்கி சேவைகளில் மாற்றங்கள்
நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் பிஎன்பி ஆகியவை தங்களது சேவை கட்டணங்கள் மற்றும் கார்டு நன்மைகளை மாற்றியுள்ளன: எஸ்பிஐ: பிப்ரவரி 15 முதல், ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். ரூ.25,000 முதல் 1 லட்சம் வரை ரூ.2+ஜிஎஸ்டி, ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை ரூ.6+ஜிஎஸ்டி மற்றும் ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை ரூ.10+ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும். எச்டிஎஃப்சி: இன்ஃபினியா கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், இனி மாதத்திற்கு அதிகபட்சமாக 5 முறை மட்டுமே ரிவார்டு பாயிண்டுகளைப் பயன்படுத்த முடியும். பிஎன்பி: பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் தங்களது கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக்
ஃபாஸ்டேக் புதிய விதிகள்
ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியான செய்தி கிடைத்துள்ளது. பிப்ரவரி 1 முதல், ஃபாஸ்டேக் பெறுவதற்கான கேஒய்சி சரிபார்ப்பு முறை நீக்கப்பட்டுள்ளது: கேஒய்வி நீக்கம்: புதிய பாஸ்டேக் வாங்குபவர்கள் இனி Know Your Vehicle (கேஒய்வி) செயல்முறையைச் செய்ய வேண்டியதில்லை. வங்கிகளே வாகன விவரங்களைச் சரிபார்த்து பாஸ்டேக்கை ஆக்டிவேட் செய்துவிடும். பழைய பாஸ்டேக்: ஏற்கனவே காரில் பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கும் வழக்கமான கேஒய்வி தேவையில்லை. ஏதேனும் புகார் இருந்தால் மட்டுமே சரிபார்ப்பு நடத்தப்படும். இதன் மூலம் சாலைப் பயணிகளில் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும்.
வரி
எல்பிஜி விலை மற்றும் வரி மாற்றங்கள்
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதால், பல பொருட்களின் விலையில் மாற்றம் வரலாம்: வரி உயர்வு: புகையிலை பொருட்கள், சிகரெட் மற்றும் பான் மசாலா ஆகியவற்றின் மீதான வரி அதிகரித்துள்ளதால், அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை: வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.50 அதிகரித்துள்ளது.