'வெளிநாட்டு நிதிக்குத் தடையில்லை': FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்காவுக்கு இந்தியத் தூதர் வெளியிட்ட 'உண்மை நிலவரம்'
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026' (FCRA Amendment Bill, 2026) குறித்து அமெரிக்க எம்.பி ஒருவர் முன்வைத்த விமர்சனங்கள், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் இந்தியாவில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகளை பாதிக்கும் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்துவது இந்தியாவின் இறையாண்மை சார்ந்த உள்நாட்டு விவகாரம் என மத்திய அரசு அதனை நிராகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா, இந்த மசோதா குறித்த தவறான புரிதல்களையும், பரப்பப்படும் வதந்திகளையும் தெளிவுபடுத்தும் வகையில் 'கற்பனை vs உண்மை' என்ற தலைப்பில் விரிவான விளக்கமளித்துள்ளார்.
கட்டுக்கதை 1:
புதிய சட்டம் சிவில் சமூகத்திற்கான வெளிநாட்டு உதவியைத் துண்டிக்கும்
உண்மை: உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தம் வெளிநாட்டு நன்கொடைகளைத் தடை செய்யவோ அல்லது சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கும் சிவில் சமூக அமைப்புகளை மூடவோ செய்யாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறை இந்தியாவில் பல தசாப்தங்களாக உள்ளது.
முதன்முதலில் 1976-ல் இயற்றப்பட்ட FCRA சட்டம், பின்னர் 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
2026 மசோதா என்பது வெளிப்படைத்தன்மையையும் சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையே ஆகும்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் FCRA பதிவைப் பெற்று, சுகாதாரம், கல்வி, பேரிடர் நிவாரணம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக வெளிநாட்டு நிதியைத் தொடர்ந்து பெற்று வருகின்றன.
கட்டுக்கதை 2:
FCRA சட்டத்தால் வெளிநாட்டு நிதி குறைந்து தொண்டு நிறுவனங்கள் முடங்கியுள்ளன
உண்மை: இந்தியாவில் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி உண்மையில் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.
இந்தியத் தூதர் குவாத்ரா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, FCRA பதிவு பெற்ற அமைப்புகளுக்கு வந்த வெளிநாட்டு நிதி 2010-11 இல் 1.2 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 2.67 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் லட்சக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இருந்தபோதிலும், சுமார் 14,450 அமைப்புகள் மட்டுமே FCRA பதிவைக் கொண்டுள்ளன.
எனவே, இச்சட்டம் அனைத்து NGO-க்களையும் கட்டுப்படுத்தவில்லை; வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
கட்டுக்கதை 3:
தேவாலயங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட NGO சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வழிவகுக்கும்
உண்மை: ஒரு தொண்டு நிறுவனத்தின் FCRA பதிவு ரத்து செய்யப்படும்போது, வெளிநாட்டு நிதியைக் கொண்டு உருவாக்கப்பபட்ட சொத்துகள் அரசு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் விதி 2010 முதலே அமலில் உள்ளது; இது புதிய விதி அல்ல.
2026 புதிய திருத்த மசோதாவில், அத்தகைய சொத்துகளைப் பாதுகாக்கவும், நிறுவனம் மீண்டும் தனது பதிவைப் புதுப்பித்தால் அந்தச் சொத்துகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிதியைத் திருப்பி ஒப்படைக்கவும் தெளிவான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சொத்துகள் ரத்து செய்யப்படும் பட்சத்தில், வழிபாட்டு நடைமுறைகள் தொடர்வதை உறுதிசெய்யும் பொருட்டு, அதே மத நம்பிக்கையுடைய மற்றொரு FCRA பதிவு பெற்ற அமைப்பிடம் அச்சொத்துகள் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கதை 4:
குறிப்பிட்ட ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ இலக்கு வைக்கிறது
உண்மை: FCRA சட்டம் முற்றிலும் மதச்சார்பற்ற முறையில் அனைத்து அமைப்புகளுக்கும் சமமாகப் பொருந்தக்கூடியது.
அமைப்புகளின் மத அடையாளத்தைப் பொறுத்து அல்லாமல், அவை பெறும் வெளிநாட்டு நிதியின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இச்சட்டம் செயலாற்றுகிறது.
கல்வி, மருத்துவப் பணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல் போன்ற அனைத்து மத நிறுவனங்களின் நலத்திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு நிதி பெற அனுமதி உண்டு.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இது இந்தியாவின் உள்நாட்டு இறையாண்மைக்கு உட்பட்ட விவகாரம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கட்டுக்கதை 5:
வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்துவதில் இந்தியா மட்டுமே விதிவிலக்கு
உண்மை: உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளும் வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளன. அமெரிக்காவில் 1938 முதல் FARA சட்டமும், 2010 முதல் FATCA சட்டமும் அமலில் உள்ளன.
இதேபோல ஆஸ்திரேலியா (2018), கனடா (2024), மற்றும் பிரிட்டன் (2025) ஆகிய நாடுகளும் வெளிநாட்டுத் தலையீடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியமும் இதற்கான சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.
எனவே, பிற ஜனநாயக நாடுகள் தங்களின் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் போது, இந்தியாவும் தனது தேசிய நலனுக்காக இத்தகைய சட்ட விதியை உருவாக்குவது இயல்பான ஒன்று என இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.