LOADING...
போர்களுக்கு இனி இடமில்லை; அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி உறுதி
பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என அரபு நாடுகளின் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி உறுதி

போர்களுக்கு இனி இடமில்லை; அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி உறுதி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
10:57 am

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 2வது இந்தியா - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM), 22 அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரபு நாடுகள் இந்தியாவின் "விரிவாக்கப்பட்ட அண்டை நாடுகள்" (Extended Neighbourhood) என்றும், இரு தரப்பிற்கும் இடையே ஆழமான நாகரீகப் பிணைப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயார் என அவர் உறுதியளித்தார்.

அமைதி திட்டம்

பாலஸ்தீனம் மற்றும் காசா அமைதித் திட்டத்திற்கு ஆதரவு

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இதுவரை இந்தியா சுமார் 170 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதித் திட்டத்தை இந்தியா வரவேற்பதாகப் பிரதமர் தெரிவித்தார். அக்டோபர் 2025இல் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காசாவில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்றார். 1967 ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில், இஸ்ரேலுடன் இணைந்து அமைதியாக வாழக்கூடிய ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாவதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று கூட்டுக் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது.

போர்டு ஆஃப் பீஸ்

டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ்

அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அதிபர் டிரம்ப், போர்டு ஆஃப் பீஸ் என்ற புதிய சர்வதேச அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்த அமைப்பிற்கு டிரம்ப் வாழ்நாள் தலைவராக இருப்பார். இதில் நிரந்தர உறுப்பினராக இணைய நாடுகள் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,300 கோடி) செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இணைவதற்குப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியா இதுவரை தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை.

Advertisement

மத்தியஸ்தர்

இந்தியாவின் மத்தியஸ்தர் பாத்திரம்

பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் வார்சென் அகபேக்கியன் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டினார். "இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாடு, அது எப்போதும் எங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்யும் தகுதி இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது." என்று அவர் குறிப்பிட்டார். போர் முடிவுக்கு வந்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பாலஸ்தீனத்தின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

Advertisement

பயங்கரவாதம்

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு

இக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை இந்தியா ஜீரோ டாலரன்ஸ் கொள்கையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தார். சமீபத்தில் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அரபு நாடுகள் கடுமையாகக் கண்டித்தன. எல்லையோரப் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement