தனிமையில் சந்திக்க வரும்படி கடிதம் எழுதிய ஆசிரியர் - போலீசில் புகார் அளித்த மாணவியின் தந்தை
உத்தரப்பிரேதேசத்தில் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் பணிபுரியும் ஹரி ஓம் சிங் என்னும் 47 வயது ஆசிரியர், அப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான். அந்த கடிதத்தில், "உன்னை ,மிகவும் விரும்புகிறேன், விடுமுறை தினங்களில் நீ இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கும். எப்போ முடியுமோ அப்பொழுது தொலைபேசி கிடைக்கும் பட்சத்தில் எனக்கு போன் செய்" என்று எழுதியிருந்தது. மேலும், தேர்வு முடிந்து விடுமுறை காலம் தொடங்கும் முன்னரே, தன்னை தனிமையில் வந்து சந்திக்கும்படியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதே போல், 'படித்ததும் கிழித்து விடவும்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
அதிர்ச்சியில் உறைந்த மாணவியை கண்ட மாணவியின் தந்தை - மகளை கடத்தி செல்வதாக மிரட்டிய ஆசிரியர்
ஆனால் அந்த கடிதத்தை படித்த மாணவி அதிர்ச்சியில் நிற்பதை கண்ட அவளது தந்தை, அந்த கடிதத்தை படித்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், மாணவியின் தந்தை அந்த ஆசிரியரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அந்த ஆசிரியர், தன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறியதோடு, தொடர்ந்து தொல்லை செய்தால் மாணவியை கடத்தி செல்வேன் என்றும் மிரட்டியுள்ளான். மாணவியின் தந்தைக்கும் அவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரை கண்டு சண்டையிட, அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். எனவே இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பரண்ட் குன்வர்சிங் இவ்வழக்கினை பதிவு செய்ததோடு, ஆசிரியர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.