சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு கல்தா: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் அமைச்சரவையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் இலாகா மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நிர்வாகத் திறனில் பின்தங்கியவர்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தலைமை முடிவு செய்துள்ளது என ஊடக செய்திகள் கூறுகின்றன. முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடன் இந்த மாற்றங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி நடவடிக்கை
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை
வெளியான யூகங்கள் அடிப்படையில், போதைப்பொருள் மற்றும் 'பவுடர் வீடியோ' சர்ச்சைகளில் சிக்கி எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்குள்ளான அமைச்சர் 'கில்லி' சரத்குமார் அமைச்சரவையிலிருந்து ஒட்டுமொத்தமாகக் கழற்றிவிடப்பட அதிக வாய்ப்புள்ளது.
அடுத்தாக, பொதுவெளியில் முரண்பாடாகப் பேசி நெருக்கடியை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் (விஜய்) பார்த்திபனிடமிருந்து இத்துறை பறிக்கப்பட்டு, கூட்டுறவுத் துறை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இலாகா மாற்றங்கள்
இலாகா மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகள்
நிர்வாகத்தை வேகப்படுத்தும் நோக்கில் முக்கியத் துறைகளின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
ஆதாரங்கள் இன்றிப் பேசி விமர்சனத்தைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு, தொழில்துறை ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்படலாம்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் இருக்கும் பள்ளிக்கல்வித் துறை, அனுபவம் வாய்ந்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் உயர்கல்வித் துறை மாற்றப்பட வாய்ப்புள்ளது.
கனிமவளத் துறை அமைச்சர் பிரபு ஆவின் துறைக்கும், மீன்வளத்துறை மற்றும் கைத்தறித் துறைகள் அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் விஜய் பாலாஜி இடையே பரஸ்பரம் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.