Page Loader
விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது
இந்திய விமானங்களில் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள்

விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது

எழுதியவர் Sindhuja SM
Jan 31, 2023
03:05 pm

செய்தி முன்னோட்டம்

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது விஸ்தாரா விமானத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. நேற்று(ஜன 30) அதிகாலை விஸ்தாராவின் அபுதாபி-மும்பை விமானமானத்தில் பயணித்த 45 வயதான இத்தாலியப் பெண் குடிபோதையில் விமான பணியாளர் ஒருவரை குத்தியதாகவும், மற்றொருவரின் மீது துப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்திய விமானங்களில் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியாவின் நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் வயதான சக பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

விஸ்தாரா

குடிபோதையில் இருந்த பயணியால் சலசலப்பு

பாலோ பெருசியோ என்ற பெண், அதிகாலை 2:00 மணிக்கு(IST) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எகானமி வகுப்பு டிக்கெட்டை வைத்து கொண்டு வணிக வகுப்பு இருக்கையில் உட்கார தகராறு செய்ததாகவும், அதனால் விமான பணியாளர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின், விஷயம் தீவிரமடைந்ததால், அவர் தனது ஆடைகளில் சிலவற்றைக் கழற்றிவிட்டு, அரை நிர்வாணமாக விமானத்திற்குள் அங்கும் இங்கும் நடந்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது. விமான பணியாளர்களின் புகாரின் அடிப்படையில், நேற்று(ஜன 30) அதிகாலை விமானம் தரையிறங்கியவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை மும்பையின் சஹார் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் பாஸ்போர்ட்டை போலீசார் கைப்பற்றி, மும்பை-அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.