Page Loader
விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
விநாயகர் சதுர்த்தி 2024

விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2024
11:07 am

செய்தி முன்னோட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுா்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்

விநாயகர் சிலை கரைப்பு குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

விநாயகர் சிலை கரைப்பது குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் பின்வருமாறு:- களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக்க மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூச சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய , நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்தவும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.