இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் தவெக தலைவர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக கட்சியின் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவுக்கு விஜய் இன்று மாலை 5.30 மணியளவில் வருகைதந்து, வெள்ளை கைலி, வெள்ளை சட்டை மற்றும் குல்லா அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர், நோன்பு கஞ்சி அருந்தி இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பை திறந்தார். இதைத் தொடர்ந்து, சிறப்பு தொழுகையில் பங்கேற்று, இஸ்லாமிய சமூகத்தினருடன் இணைந்து பிரார்த்தனை செய்தார்.
உரை
நிகழ்ச்சியில் விஜய் உரை
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், அங்கு இஸ்லாமிய சமூக மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, "எனது அன்பான முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புனித நபியின் வாழ்க்கையைப் பின்பற்றுவதன் மூலம், நாம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்த வேண்டும்.
இந்த நிகழ்விற்காக அனைவரும் ஒன்று சேர்ந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கூறுகிறேன்." என்று கூறினார்.
விஜய் சமூக நல்லிணக்கம் மற்றும் மத ஒற்றுமையை வலியுறுத்தும் நிலையில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர் அணியும் உடையுடன் பங்கேற்றது, அவரது கொள்கையை எதிரொலிப்பதாக உள்ளது.