நடிகர் பிரகாஷ் ராஜிற்கு அம்பேத்கர் சுடர் விருது: விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, நடிகர் பிரகாஷ் ராஜிற்கு, அம்பேத்கர் சுடர் விருது வழங்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, சமூகம், கலை, இலக்கியம் போன்ற பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான விருது பட்டியலை திருமாவளவன் வெளியிட்டார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில்,"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்" என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள்
"முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய்,..உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன". "அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு. பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக விருதுகள் வழங்கும் விழா, மே 25ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.