
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு
செய்தி முன்னோட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல அடுக்கு பாதுகாப்பினை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்று ஒரு பக்தர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது திருப்பதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி கோயில் இடம்பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திருப்பதி கோயிலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினை மாநில காவல்துறையும், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரும் மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும் தீவிரவாத தாக்குதல் போன்ற அவசரக்கால நேரத்தில் விரைந்து செயல்படுவதற்கான அதிரடி படை பயிற்சியினை பெற்ற ஆக்டோபஸ் படையினரும் திருப்பதி மலையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார்கள்.
திருப்பதி
பக்தர் எடுத்த வீடியோ பதிவு குறித்து விசாரணை துவக்கம்
இந்நிலையில் திருப்பதியில் நாச வேலைகள் நடக்காமல் தடுக்க செல்போனுக்கும், தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீவிர பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் பக்தர் ஒருவர் கோயிலுக்குள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
வெள்ளிவாசலை தாண்டி கேமரா எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இவர் வெள்ளிவாசலினை தாண்டியும் வீடியோ எடுத்துள்ளார்.
பக்தரின் இந்த செயல் மூலம் திருப்பதி கோயில் பாதுகாப்பில் பெரும் பின்னடைவு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ்துறை அளித்துள்ள புகாரின் பேரில் திருமலை காவல்துறை வீடியோ எடுத்த பக்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.