எல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி ராமர் கோவில் விழாவிற்கு வரவேண்டாம் என அறக்கட்டளை; கொதித்தெழுந்த VHP
அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி போராட்டத்தில் முன் நின்று போராடியவர்களில் முக்கியமானவர்கள் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி. இந்த நிலையில், தற்போது தயாராகி வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இவர்கள் இருவரும் உடல்நிலை மற்றும் வயது காரணமாக கலந்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுத்ததாகவும், அதனால், அடுத்த மாதம் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பெங்கேற்கவுள்ளார்.
2,200 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 4,000 இந்து மத துறவிகள் மற்றும் 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலில், ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விழா ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு, 'பிரான் பிரதிஷ்டை' ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கூறினார். விழாவிற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ராய். "ஆறு தரிசனங்களின் (பண்டைய பள்ளிகள்) சங்கராச்சாரியார்கள் மற்றும் சுமார் 150 இந்து மத துறவிகள் மற்றும் முனிவர்கள் விழாவில் பங்கேற்பார்கள்," திரு ராய் கூறினார்.
"மூத்த தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு": VHP
ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு பாஜக மூத்த தலைவர்களான லால் கிருஷ்ண அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) இன்று தெரிவித்துள்ளது. ராமர் கோவில் அறக்கட்டளை இந்த மூத்த தலைவர்கள், தங்கள் வயது மற்றும் கடுமையான குளிர் காரணமாக வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த சில மணி நேரத்தில், VHP இந்த அறிக்கையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. விஎச்பியின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார்,"இரு மூத்த தலைவர்களும் நிகழ்ச்சிக்கு வர தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாகக் கூறினார்கள்," என்று கூறினார்.
புகழ்பெற்ற ரத யாத்திரை
தற்போது 96 வயதாகும் திரு.அத்வானி மற்றும் 89 வயதான திரு ஜோஷி ஆகியோர் ராம ஜென்மபூமி இயக்கத்தை முன்னணியில் இருந்து வழிநடத்தியவர்கள். LKஅத்வானி, 1990ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் அயோத்தி வரை சர்ச்சைக்குரிய ரத யாத்திரையை இயக்கத்திற்கு ஆதரவைத் திரட்டினார். இந்த யாத்திரை வடஇந்தியாவின் பல நகரங்களில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 6, 1992 அன்று, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இவ்விரண்டு பாஜக தலைவர்களும் அந்த இடத்திலேயே இருந்தனர். அதன்பின்னர் பல்லாண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில், பாபர் மசூதி இருந்த இடம், ராமர் கோவிலுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.