சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்
1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்பி ஓஸ்வால், சைபர் மோசடி கும்பலால் ₹7 கோடி பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு எஸ்பி ஓஸ்வாலை அணுகி ஆன்லைன் வழியாக கைது செய்ய உள்ளதாக போலி கைது வாரண்ட் மூலம் அணுகி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நிறுவனத்தின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ .7 கோடி தொகை மாற்றப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய இரண்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ₹5.25 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கி, கும்பலில் பலரை அடையாளம் கண்டுள்ளனர்.
பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை
இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, இணைய மோசடி செய்பவர்களின் வலையமைப்பை பஞ்சாப் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை முறியடித்த பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதுவரை, அவர்களிடமிருந்து ₹5.25 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பஞ்சாபின் லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். இந்த மோசடி வழக்கில் அடையாளம் காணப்பட்ட ஏழு சைபர் குற்றவாளிகள் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தொழில் அதிபர் ஓஸ்வாலை ஏமாற்றியது போலவே இந்த மோசடி கும்பல் தொழில்துறையினர் மற்றும் பிற நபர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர். இதேபோல் அசாமின் கவுகாத்தியிலும் கடந்த வாரம் ₹1.01 கோடியை இந்த கும்பல் ஏமாற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.