அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படும்: டிடிவி தினகரன்
முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016இல் உயிரிழந்தார். அப்போதிலிருந்து, அதிமுக கட்சியில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. முதலில், ஓ.பி.எஸ் முதல்வரானார். அதன் பிறகு, ஈ.பி.எஸ் அந்த பதவிக்கு வந்தார். திடீரென்று சின்னம்மா என்று அழைக்கப்பட்ட சசிகலா ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றார். கட்சிக்குள் நடந்த பிரச்சனையால், டிடிவி தினகரன் அதிமுக கட்சியில் இருந்து விலகி அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அப்போது ஆரம்பித்த பிரச்சனைகள் இன்று வரை முடிந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், பிரிந்திருந்த ஓ.பி.எஸும் டிடிவி தினகரனும் இணைந்து முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டு திருமண விழாவில் இன்று கலந்துகொண்டனர். ஏற்கனவே, சென்ற மாதம் டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று திருமண விழாவில் டிடிவி தினகரன் பேசியதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸுடன் இணைந்து, இணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் அவர்களது வீட்டு திருமண விழாவில் அமமுக சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சிலரது பண ஆசையால் அதிமுகவில் இருந்து பிரிந்து வர வேண்டியதாகிவிட்டது. ஓ.பி.எஸுக்கும் எனக்கும் இடையே ஒரு நல்ல நட்பு நிலவி வருகிறது. ஒன்றாக சேர்ந்து, விட்டு கொடுத்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஜெயலலிதாவின் 30-ஆண்டுகால கனவை மக்களிடம் எடுத்து செல்லவும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டுவரவும் அமமுக அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது. இந்த இணைப்பு இயற்கையாக நேர்ந்தது. வருங்காலத்தில், இந்த இணைப்பின் உதவியோடு துரோகிகளுக்கு பாடம் புகட்டி, திமுகவை வீழ்த்தி மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டுவர அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.