பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்க உள்ளனர். இதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு உணவகம் 'மோடி ஜி தாலி' என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. 'தாலி' என்ற சொல் 'உணவு செட்' என்று வட இந்தியாவில் பொருள்படுகிறது. பொதுவாக, தமிழகத்தில் இதை 'மீல்ஸ்' என்று நாம் அழைக்கிறோம்.
புலம்பெயர்ந்த இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க 'தாலி' தயாரிக்கப்பட்டிருக்கிறது
செஃப் ஸ்ரீபாத் குல்கர்னி என்பவர் இந்த 'மோடி ஜி தாலி'யை உருவாக்கி இருக்கிறார். இந்த 'தாலி'யில் கீழுள்ள உணவு வகைகள் வழங்கப்படுகின்றன: 1. கிச்சடி 2. ரசகுல்லா(பாலாடையில் செய்யப்படும் இனிப்பு) 3. சர்சன் கா சாக்(கடுகு கீரையால் செய்யப்படும் கறி) 4. காஷ்மீரி டம் ஆலு(உருளைக்கிழங்கால் செய்யப்படும் கறி) 5. இட்லி, 6. தோக்லா(குஜராத்தின் பிரபல இனிப்பு வகை) 7. சாச்(மோர்) 8.அப்பளம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க இந்த தாலி தயாரிக்கப்பட்டிருப்பதாக குல்கர்னி கூறியுள்ளார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கௌரவிக்கும் விதமாக இந்த உணவகத்தில் இன்னொரு தாலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.