முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
உத்தர பிரதேசம்: இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த பள்ளியை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணை முடியும் வரை அந்த பள்ளி மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியை மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகி இருந்தது.
"இது ஒரு சிறிய பிரச்சினை": குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை டிரிப்தா தியாகி, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் ஒரு சிறுவனின் மதத்தை குறிப்பிட்டு பேசி, அவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுவனுடன் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த மாணவனின் கன்னத்தில் அடிப்பதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டிருந்தது. எனினும், இந்த விஷயம் குறித்து பேசிய அந்த ஆசிரியை, இது ஒரு "சிறிய பிரச்சினை" என்று தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். "நான் ஊனமுற்றவள், அதனால் அவன் வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை வைத்து அவனை அடிக்க சொன்னேன்." என்று அந்த ஆசிரியை கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலவரிசையைப் பகிரவும்