மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மணிப்பூரின் பழமையான தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார். இது பற்றி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமித் ஷா,"ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டது!!! வடகிழக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட மோடி அரசின் இடைவிடாத முயற்சிகள், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) இன்று புதுதில்லியில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அமைதி நிறைவேற்றத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை இணைத்துள்ளது." என்று கூறினார்.
மத்திய அரசின் தடையை தொடர்ந்து, சமாதானத்திற்கு வந்த UNLF
"மணிப்பூரின் பள்ளத்தாக்கின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, வன்முறையைக் கைவிட்டு, சமாதானத்தை ஒப்புக்கொண்டுள்ளது. ஜனநாயக செயல்முறைகளுக்கு நான் அவர்களை வரவேற்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் அவர்களின் பயணத்திற்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்,"என்று உள்துறை அமைச்சர் மேலும் கூறினார். UNLF உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகளை உள்துறை அமைச்சகம் (MHA) தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலைகள் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் ஈடுபடுவதாக கூறி இந்த தடையை மத்திய அரசு விதித்தது.