பீகாரில் அதிவேகமாகச் சென்ற மத்திய அமைச்சரின் காருக்கு அபராதம் விதிப்பு
பீகாரில் கார்களுக்கான சட்ட வரம்பை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு, அபராதம் விதிக்கப்பட்டு இ-சலான் வழங்கப்பட்டது. பீகாரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் புதிதாக நிறுவப்பட்ட மின்-கண்டறிதல் அமைப்பில் சிராக் பாஸ்வானின் கார் வேகமாகச் சென்றதைக் கண்டறிந்ததை அடுத்து, இ-சலான் வெளியிடப்பட்டது. அவர் ஹாஜிபூரில் இருந்து சம்பாரண் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் விதி மீறி அதிக வேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. பீகார் போக்குவரத்து காவல்துறை மாநிலத்தில் புதிய மின்-கண்டறிதல் அமைப்பு மூலம் கடந்த ஒரு வாரத்தில் ரூ.9.49 கோடி மதிப்பிலான 16,700 இ-சலான்களை வழங்கியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெளிமாநில வாகனங்களுக்கு அதிக சலான்கள்
மொத்தமுள்ள 16,755 இ-சலான்களில், 7,079 இ-சலான்கள் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும், 9,676 சலான்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுவதைக் கண்டறிய பீகாரில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில் மின்-கண்டறிதல் அமைப்புகள் மாநில போக்குவரத்து காவல்துறையால் நிறுவப்பட்டுள்ளன. இதற்கிடையே, ராஞ்சியில் நடந்த லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தேசிய செயற்குழு கூட்டத்தில் சிராக் பாஸ்வான் கட்சியின் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.