எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு
பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் வரையறையை கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அரசியலமைப்பில் எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற விதி இல்லை என்றும், அதை நிலைநிறுத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடந்தது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளைக் கடைப்பிடிப்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது என்பது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு." என்றார்.
கிரீமி லேயர் விலக்கு பற்றிய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு
முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்காக எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்குள் துணைப்பிரிவுகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 6-1 என்ற பெரும்பான்மையுடன் இந்த முடிவு நிறைவேற்றப்பட்டது. கிரீமி லேயர் போன்ற துணை பிரிவுகளுக்கான அடிப்படையானது "மாநிலங்களால் அளவிடக்கூடிய மற்றும் நிரூபிக்கக்கூடிய தரவுகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், அதன் சுய விருப்பப்படி செயல்பட முடியாது" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி பாஜகவின் எஸ்/எஸ்டி தலைவர்கள் மற்றும் சிராக் பஸ்வான் போன்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.