முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக மின்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் பாஜகவின் முக்கிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்திருந்த போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அமைச்சர் அமித்ஷாவின் கார் சரியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது திட்டமிட்ட மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
மாற்று ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும்: மின்துறை
இந்த செய்தி தேசிய தொலைக்காட்சிகளிலும் ஊடங்களிலும் வெளியிடப்பட்டது. திமுக அரசு தான் திட்டமிட்டு இந்த மின்வெட்டை ஏற்படுத்தியதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். உள்துறை செயலகம் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டது. இந்நிலையில், தமிழக மின்துறை, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய நிர்வாக இயக்குநருக்கு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், " முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் மாற்று ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.