
'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது பதவியல்ல, பொறுப்பு என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (செப்டம்பர் 28) தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், துணை முதல்வர் பதவி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
— Udhay (@Udhaystalin) September 28, 2024
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல,… pic.twitter.com/x7InLzXoNc
அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், கே.ராமசந்திரன் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி, கயல்விழி செய்வராஜ், மெய்யநாதன், மதிவேந்தன், ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான துறைகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.