Loading...
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் விவகாரம்: ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்
உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்

கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் விவகாரம்: ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத SMS அனுப்பிதாகக் கூறப்படும் ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் புகார் அளிக்க வந்தவரைத் தாக்கிய சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். முன்னதாக நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோருடன் சென்று அவர் ஆளுநரைச் சந்தித்தார்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை மற்றும் உயரதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வலியுறுத்தல்

ஆளுநருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) ஆகியோரை ஆளுநர் நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டுகள்

ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

புதிய ஆட்சி அமைந்த கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே குற்றவாளிகளாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே அரசு கையாள்வதாக விமர்சித்தார்.

அத்துடன், டிஜிபி அலுவலகத்தில் தாம் அளித்த பேட்டியை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

கோரிக்கை

தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை கோரிக்கை

இந்த விவகாரத்தைத் தலைமைச் செயலாளர் கடந்த 116 நாட்களாக மூடிமறைத்து விட்டதாகவும், எம்எல்ஏவைக் காப்பாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியரிடம் அவர் பேரம் பேசியதாகவும் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

எனவே, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும், இத்தகைய சம்பவம் நடைபெறவே இல்லை எனப் பொய் கூறிய மூன்று அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தமிழக அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககர்லா உஷா தலைமையில் உள் புகார் குழுவை அமைத்துள்ள நிலையில், தற்போது சிபிஐ விசாரணை மற்றும் தலைமைச் செயலாளர் மீதான நடவடிக்கையை வலியுறுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT