உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கியது. இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் ராகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர், குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு போது, காவல்துறையினரை கற்களால் தாக்கி விட்டு தப்ப முயன்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் கால் தடுக்கி விழுந்ததில் காயமடைந்தார். ஆட்டோ டிரைவர் தாக்கியதில் இரண்டு காவலர்களும் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி 8 கிலோமீட்டர் ரத்தப்போக்குடன் நடந்து சென்று, வீடு வீடாக உதவி கேட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உரையச் செய்தது.
காக்கிக்குள் மனிதநேயம்: சிறுமியை தத்தெடுக்க முன்வந்த காவல் ஆய்வாளர்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவ யாரும் முன் வராத நிலையில், மருத்துவமனையில் அச்சிறுமிக்கு இரு காவலர்கள் ரத்தம் வழங்கியுள்ளனர். மேலும் ஒரு காவலர் அந்த சிறுமியின் கல்விக்கான செலவை தான் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை தத்தெடுத்துக்கொள்ள மகாகல் காவல் நிலைய ஆய்வாளர் அஜய் வர்மா முன் வந்தார். இது குறித்து அவர் பேசியது: "அந்த சிறுமி அவரது காயங்களுக்காக சிகிச்சை பெற்ற போது, அவளின் அலறல் சத்தம் கேட்டு நான் கண்ணீர் வடித்தேன். கடவுள் ஏன் அவளுக்கு இவ்வளவு பிரச்சனைகளுக்கு தருகிறார்" "சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்து விட்டதால் என்னால் அவளுக்கு சட்ட சிக்கல்கள் இல்லாமல் உதவ முடியும். அச்சிறுமியின் பெற்றோர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால் நான் அவளை சட்டபூர்வமாக தத்தெடுத்திருப்பேன்" என்றார்.