உஜ்ஜைன் பாலியல் பலாத்காரம்- ஆட்டோ டிரைவர் கைது, மூவரிடம் போலீசார் விசாரணை
மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில், 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், 38 வயது ஆட்டோ ட்ரைவரான ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் மேலும் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்புக்குள்ளான சிறுமி ஜீவன் கெரியில் ஆட்டோவில் எறியது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி பயணித்த ஆட்டோவில் படிந்திருந்த ரத்தக்கரை குறித்து, தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி சந்தித்த ஐந்து பேரில், மூவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் ஆட்டோ டிரைவர் ஒருவர். மற்ற இருவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழிந்த உடைகள், ஒழுகும் ரத்தம், காணாமல் போன மனிதாபிமானம்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, உதவி கேட்டு எட்டு கிலோமீட்டர் நடந்து சென்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் இப்போது கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி கட்சிகளில், அச்சிறுமி ரத்தப்போக்குடன் ஒவ்வொரு வீடாக சென்று உதவி கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிறுமிக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இறுதியாக உஜ்ஜயினியின் பட்நகர் பகுதியில் ஒரு ஆசிரமத்தின் முன் மயக்கமடைந்த போது மீட்கப்பட்டு இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு எழுந்ததை அடுத்து, மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.