LOADING...
வெற்றி சான்றிதழை எடுத்துவரத்தவறியதால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியாமல் போன தவெக அமைச்சர் கீர்த்தனா; அடுத்து என்னவாகும்?
தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை தவறவிட்ட அமைச்சர் கீர்த்தனா

வெற்றி சான்றிதழை எடுத்துவரத்தவறியதால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியாமல் போன தவெக அமைச்சர் கீர்த்தனா; அடுத்து என்னவாகும்?

எழுதியவர் Vasuki
May 11, 2026
12:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், சிவகாசி தொகுதியிலிருந்து அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வி எஸ். கீர்த்தனாவால் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முறையான சான்றிதழ் இல்லாமல் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது எனத் தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் கருப்பையா மற்றும் சட்டமன்றச் செயலர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கும் வரை அவர் அவையில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்கவோ அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவோ முடியாது. குறிப்பாக அடுத்து நடைபெறவுள்ள சபாநாயகர் தேர்தல் மற்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஃப்ளோர் டெஸ்டிலும் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போகலாம்.

மரபு மீற முடியாது

சட்டசபையில் நடந்தது என்ன?

சட்டமன்றச் செயலகம் ஏற்கனவே விடுத்திருந்த அறிவிப்பின்படி, புதிய உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தேர்தல் வெற்றிச் சான்றிதழை (Certificate of Election) கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்று காலைப் பதவியேற்புக்காகச் சட்டமன்றம் வந்த அமைச்சர் கீர்த்தனாவிடம் அதிகாரிகள் சான்றிதழைக் கேட்டபோது, அவர் அதனைத் தற்செயலாகத் தவறவிட்டிருந்தது தெரியவந்தது. முறையான சான்றிதழ் இல்லாமல் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது எனச் சட்டமன்றச் செயலர் மற்றும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா திட்டவட்டமாகத் தெரிவித்ததால், அவர் இன்று எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க முடியாமல் போனது.

மீண்டும் பதவியேற்பு

அடுத்த கட்ட நடைமுறை என்ன?

கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு, சட்டமன்றம் கூடும் எந்த நேரத்திலும் சபாநாயகரின் அறையிலோ அல்லது அவையிலோ தனியாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்திலிருந்து 6 மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பதவியேற்கலாம். இருப்பினும், அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், நிர்வாகப் பணிகளுக்காக இன்னும் சில தினங்களிலேயே (நாளை அல்லது அதற்கு மறுநாள்) அவர் பதவியேற்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கும் வரை அவர் அவையில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. எனவே, மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக அவர் பதவியேற்பது அவசியமாகும்.

Advertisement

இளைய அமைச்சர்

கவனக்குறைவு

விஜய் அமைச்சரவையின் மிக இளைய அமைச்சரான கீர்த்தனா, கவனக்குறைவால் இந்தச் சிக்கலில் சிக்கியிருப்பது தவெக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பதற்றத்தில் சான்றிதழைத் தவறவிட்டிருக்கலாம், விரைவில் அவர் பதவியேற்பார் எனத் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்கள் உற்சாகமாகப் பதவியேற்று வரும் நிலையில், அமைச்சராக இருந்தும் கீர்த்தனாவால் முதல் நாளில் பதவியேற்க முடியாதது இன்று கோட்டையில் பேசுபொருளாகியுள்ளது. இதே போல அதிமுக MLA க்கள் மூவர் இன்று பதவியேற்கவில்லை. குறிப்பாக மூத்த அமைச்சர் சி.வி. ஷண்முகம் சட்டமன்ற வளாகத்தில் இருந்தாலும், அவர் பதவியேற்பின் போது அவையில் இல்லை. பாதியிலேயே வெளியேறினார். அவர் பெயர் அழைக்கப்பட்டபோது அவர் அவையில் இல்லாததால் அவரின் பதவியேற்பும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement