Loading...
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கொள்முதல் விலை கிலோவுக்கு ₹31 குறைவு: TVK அரசுக்கு ₹187 கோடி சேமிப்பு
திமுக ஆட்சி காலத்தைக் காட்டிலும் மிக குறைந்த விலையில் துவரம் பருப்பை TVK அரசு கொள்முதல் செய்துள்ளது

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கொள்முதல் விலை கிலோவுக்கு ₹31 குறைவு: TVK அரசுக்கு ₹187 கோடி சேமிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
09:59 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய திமுக ஆட்சி காலத்தைக் காட்டிலும் மிக குறைந்த விலையில் TVK அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் மட்டும் அரசு கஜானாவிற்கு ₹187.56 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு டெண்டர் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. TVK அரசின் தற்போதைய டெண்டரில் துவரம் பருப்பு சராசரியாக கிலோ ₹77.89 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சி காலத்தில் கிலோ ₹109.15 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போதைய கொள்முதலில் கிலோவுக்கு ₹31.26 (29%) விலை குறைந்துள்ளது.

சேமிப்பு

3 மாதங்களில் ₹187 கோடி சேமிப்பு

TNCSC சார்பில் மாதந்தோறும் சுமார் 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு தேவைப்படுகிறது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 3 மாதங்களில் மொத்தம் 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ₹467.34 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதே அளவிலான பருப்பை கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்ய ₹654.90 கோடி செலவிடப்பட்டிருக்கும்.

இதே குறைந்த விலை அடுத்த 9 மாதங்களுக்கும் தொடர்ந்தால், ஆண்டுக்கு சுமார் ₹750 கோடி வரை அரசுக்கு நிதியாதாரம் சேமிக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

விலை குறைவு

சந்தை நிலவரத்தை மீறிய விலை குறைவு

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களின்படி துவரம் பருப்பின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருக்க வேண்டிய சூழலில், வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள் மூலம் 29 சதவீதம் குறைந்த விலைக்கு பருப்பு பெறப்பட்டுள்ளதாக TNCSC நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது 6 ஒப்பந்ததாரர்களுக்கு பணியாணைகள் வழங்கப்பட்டு செப்டம்பர் முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களில் 88% பேர் துவரம் பருப்பு வாங்கி வரும் நிலையில், அதில் 86% பேருக்கு கிலோ ₹30 என்ற மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT