'அன்னபூரணி சூப்பர் 6 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் வரை!' பெண்களைக் கவர விஜய் வெளியிட்ட மெகா தேர்தல் வாக்குறுதிகள்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக, அரசுப் பதவியில் இல்லாத குடும்பத் தலைவிகள் மற்றும் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இது தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச சிலிண்டர்
அன்னபூரணி சூப்பர் 6 மற்றும் இலவச சிலிண்டர்
குடும்பப் பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 'அன்னபூரணி சூப்பர் 6' என்ற திட்டத்தை விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய சாதாரண கட்டண பேருந்து இலவசத் திட்டத்தை விட விரிவானது.
தங்க மோதிரம்
குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' அமைந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு தங்க மோதிரம், பேபி கிட் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும். பெண்களுக்குக் கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள்
பெண்கள் பாதுகாப்பிற்காகப் பின்வரும் புதிய அமைப்புகளை விஜய் முன்மொழிந்துள்ளார்: அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். ராணி வேலு நாச்சியார் படை: மாநிலம் முழுவதும் 5,000 குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மகளிர் இலாகா: பெண்களுக்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.