தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்ஸிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி 2 மர்ம நபர்களால் அலுவலகத்திற்குள் வைத்தே அரிவாளால் வெட்டப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மணல் கொள்ளை குறித்து லூர்துபிரான்ஸிஸ் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்ததுடன், அவர்கள் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இதன் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று கூறப்பட்டது.
ரூ.3,000 அபராதத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து லூர்து பிரான்சிஸை கொலைச்செய்த ராமசுப்ரமணியம் (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இன்று(செப்.,15) இதற்கான தீர்ப்பினை நீதிமன்றம் அளித்துள்ளது. கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ராமசுப்ரமணியம் மற்றும் மாரிமுத்துவிற்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.