நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதால் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் புஷ்கரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து பழுதடைந்ததால் நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்தது. பேருந்து பழுதடைந்ததால் அந்த பேருந்தின் ஓட்டுநரும் சில பயணிகளும் பேருந்துக்கு பின்புறம் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் மீது மோதியதாகவும் உயிர்பிழைத்தவர்கள் கூறியுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த 11 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்
இதில் 5 ஆண்களும், 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். "குஜராத்தில் இருந்து மத யாத்திரைக்காக வந்த பக்தர்களின் டிரெய்லர் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார்-நிர்வாகம் சம்பவ இடத்தில் உள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் விரைவில் குணமடையட்டும்." என்று முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் கூறியுள்ளார்.