திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகளவில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். 108 திவ்யத்தேசங்களில் ஒன்றாக திகழும் இது ஆசியாவிலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்ட கோயில் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத்தந்து சாமித்தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டு முழுவதுமே விழாக்கோலம் கொண்டு விளங்கும் இக்கோயிலில் தற்போது ஆடி திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் கோபுரத்தின் முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை முழுமையாக சீரமைக்காமல் மேலோட்டமாக பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் சிமெண்ட் மேற்புற பூச்சு விழாமல் இருக்க சவுக்குக்கம்புகள் கொண்டு முட்டு கொடுக்கப்பட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல்
இந்நிலையில், இதனை முழுமையாக சீரமைக்க இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து கோயில் நிர்வாக ஆணையர் தரப்பில், இப்பணிகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் கோயில் நன்கொடையாளர்களிடம் கோரியதாகவும், ஆனால் யாரும் உதவ முன்வராத காரணத்தினால் கோயில் நிர்வாகமே இதற்கான பொறுப்பினை ஏற்று விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே இன்று(ஆகஸ்ட்.,5) அதிகாலை 1.50க்கு கிழக்கு கோபுர முதல்நிலை சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.