நான்காவது முறையாக முதலமைச்சர் ஆவாரா ஜோரம்தங்கா? மிசோரத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு
மிசோரத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜோரம்தங்கா நான்காவது முறையாக ஆட்சி அமைப்பாரா அல்லது புதிய கட்சி ஆட்சியமைக்குமா என்பதை முடிவு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. ஜோரம்தங்காவின் ஆட்சியின் கீழ், மிசோரம் அரசு, மியான்மாரில் இருந்து தப்பி வந்த 40,000 அகதிகளை ஏற்றுக்கொண்டது. மியான்மரில் உள்ள சின் மக்களுடனான உறவுமுறையை காரணம் காட்டி மியான்மார் அகதிகளை ஜோரம்தங்காவின் மிசோரம் அரசு ஏற்றுக்கொண்டது. அவர் செய்த இந்த மனிதாபிமான சைகையால் மிசோக்களின் ஆதரவைப் அவரது அரசு பெறும் என்று அவர் எதிர்பார்க்கிறார். எனினும், எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கத்தில்(ZPM) உள்ள ஜோரம்தங்காவின் போட்டியாளர்கள், மியான்மர் அகதிகளுக்கு அவர் உதவியது வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே என்று கூறியுள்ளனர்.
மிசோரம் தேர்தலை முன்னிட்டு சர்வதேச எல்லைகளுக்கு சீல்
மிசோரம் முழுவதும் உள்ள 1,276 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி(CEO) மதுப் வியாஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3ம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்படும். இவற்றில் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச எல்லைகளில் அமைந்துள்ள 30 வாக்குப்பதிவு மையங்கள் முக்கியமானவை மற்றும் பாதிக்கப்படக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 149 தொலைதூர வாக்குச் சாவடிகளுக்கும் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மியான்மருடனான 510 கிமீ நீளமுள்ள சர்வதேச எல்லையும், வங்கதேசத்துடனான 318 கிமீ நீளமுள்ள சர்வதேச எல்லையும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி(CEO) மதுப் வியாஸ் கூறியுள்ளார்.